அரசுடன் பேசுவதற்கு முன்னர் தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமை மிக அவசியம் என பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்தவை பின்வருமாறு,
பெரும்பான்மை பௌத்தர்களின் அமோக ஆதரவைப்பெற்று ஆழமான சிங்கள தேசியத்துவத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பினருடைய ஒற்றுமை மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள தேசியவாத தென்னிலங்கை அரசுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்க புதியதொரு அணுகுமுறை ஒன்றையும் அரசியல் மொழியையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் புத்திஜீவிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் உள்ளது, என தெரிவித்தார்.





