மருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா கொத்தணிக்கான பொறுப்பை ஏற்று வலி.தெற்கு பிரதேச சபையினுடைய தவிசாளர் பதவி விலகவேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுள்ளது.
வலி.தெற்கு பிரதேச சபையின் சிறப்பு அமர்வு தவிசாளர் எஸ்.தர்சன் தலைமையில் இன்று கூடியது. அதன்போது, மருதனார்மடம் பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு கோரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டமை தொடர்பில் உறுப்பினர்கள் சிலர் தவிசாளர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராசா துவாரகன், மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணிக்கு தவிசாளர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என கோரினார்.
“பேலியகொட மீன் சந்தை கோரோனா தொற்று பரவலாக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து மருதனார்மடம் பொதுச் சந்தை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை அலட்சியமாக விட்டதனாலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கத் தவறியதாலும் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பாவி மக்கள் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர்.
தவிசாளர் பதவியிலிருந்து நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடியாத நீங்கள் இந்தக் கொத்தணிக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராசா துவாரகன் கோரினார்.
பொதுச் சுகாதார பரிசோதகரால் தனக்கு எந்தவொரு தகவல்களும் வழங்கப்படவில்லை என்றும் செயலாளருக்கே தகவல்கள் வழங்கப்பட்டன என்றும் தவிசாளர் கூறினார். நிர்வாக ரீதியாக பொதுச் சுகாதார பரிசோதகரால் செயலாளருக்கே அறிவிக்க முடியும். பொதுச் சுகாதார பரிசோதகரை அழைத்து நடவடிக்கை எடுப்பது தவிசாளரின் பொறுப்பு என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் தற்போது சபையில் கடும் வாதம் இடம்பெற்று வருகிறது.





