ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(16) இரவு வாழ்த்து தெரிவித்தார்.

சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், பானுக ராஜபக்ஷவின் தலைமையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணி மற்றும் திசர பெரேரா தலைமையிலான ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி மோதின. இதில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆரம்ப சுற்றில் 20 போட்டிகளையும் அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகளையும் கொண்டமைந்திருந்த இம்முறை போட்டித்தொடரில் கலந்து கொண்ட அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதே கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் வெற்றிகரமாக போட்டிகளை ஏற்பாடு செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினர் ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.