
பலாலி விமான நிலையத்திற்கு ‘தந்தை செல்வா சர்வதேச விமான நிலையம்’ என்று பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் உள்ள விடயங்கள் பின்வருமாறு:
இலங்கைவாழ் அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப்பெற்று ‘ஈழத்து காந்தி’ என எல்லோராலும் அழைக்கப்பட்டவர் தந்தை செல்வா. 1947ஆம் ஆண்டு இலங்கையினுடைய முதல் பாராளுமன்றத்திலே அங்கம் வகித்தவர்.
இலங்கையின் இனப்பிரச்னைக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே சிறந்தது என கூறிவந்தாலும் அதற்கு மாற்றாக இனப்பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் நோக்கத்தோடு ‘பண்டா செல்வா’ மற்றும் ‘டட்லி செல்வா’ ஒப்பந்தங்களைச் செயல்படுத்த அன்றைய அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைத்தார்.
துரதிஷ்ட வசமாக அவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாததால் நாடு மிகப்பெரும் அழிவைச் சந்திக்க நேரிட்டது. தன்னலம் கருதாது நாட்டையும் மக்களையும் நேசித்த ஒரு ஒப்பற்ற தலைவர். தமிழ் மக்களினுடைய நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
இவ்வாறான தலைவர்களை நாடும் மக்களும் மறந்து விடக்கூடாது. அவரின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்க பலாலி விமான நிலையத்துக்கு ‘தந்தை செல்வா சர்வதேச விமான நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். தங்களுக்கும் இதில் உடன்பாடு இருக்கும் என்றே எண்ணுகின்றேன், என அக் கடிதத்தில் இருந்தது.





