மருதனார்மடம் சந்தை கொத்தணி; மேலும் 9 பேருக்கு கொரோனா

மருதனார்மடம் கொரேனா கொத்தணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மல்லாகம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவிளானைச் சேர்ந்த ஒருவரும் காங்கசேன்துறையைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணியின் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104ஆக உயர்வடைந்துள்ளது.