கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 200,000 சுயதொழில் வாய்ப்புக்கள் – பசில் ராஜபக்ச

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற 2 லட்சம் சுயதொழில் வாய்ப்புகளை வழங்க அரசு எதிர்பார்த்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக தயாரிக்கப்படும் கிராமப்புற உற்பத்திகளுக்கான சந்தையை உருவாக்குவது குறித்தும் வரவு செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக 25 ஆயிரம் புதிய விற்பனை நிலையங்களை திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினுடைய தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று (28) அலரி மாளிகையில் சமுர்த்தி முகாமையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. சமுர்த்தி வீட்டு பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அடிப்படையில் பெண் தொழில்முனைவோரை தெரிவுசெய்து, வணிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பயிற்சி மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கிராமப்புற பெண்களை ஊக்குவிப்பதற்கும், இளம் வேலையற்றவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற 2 லட்சம் சுயதொழில் வாய்ப்புகளுக்கு இவ்வாறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு எதிர்பார்த்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக தயாரிக்கப்படும் கிராமப்புற உற்பத்திகளுக்கான சந்தையை உருவாக்குவது குறித்தும் வரவு செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக 25 ஆயிரம் புதிய விற்பனை நிலையங்களை திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு எதிர்பார்க்கும் நோக்கத்தை வெற்றிகொள்வதற்கு பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும்போது நிதி மற்றும் கல்வியறிவை வழங்கி அவர்களது வணிக மேம்பாட்டிற்காக வழிநடத்தல் மற்றும் வேலையற்ற கிராமப்புற இளையோர்களுக்கு தகுந்த வாழ்வாதார வழியை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, தெரிவித்தார்.