காந்தீய வழியில் தியாகத்தை செய்தவரை நினைவுகூறுவதை தடுக்க வேண்டும் என அரசாங்கம் ஏன் நினைக்கின்றது என புரியவில்லை.இது
எங்களது விடுதலையை, எங்களது உணர்வை கொச்சைப்படுத்தும் செயற்பாடாக உள்ளது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் தெரிவித்தார்.
நேற்று இரவு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தியாகி திலீபன் பற்றிய தன்னுடைய ஞாபகப் பகிர்வுகளை மேற்கொள்ளும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
என்னுடைய அரசியல் வாழ்வில் திலீபனின் முக்கிய இடத்தில் இருந்தார். அரசியல் விடையங்களில் 1987 களில் இடைக்கால நிர்வாகத் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்ற செய்தியை கொண்டுவந்தது திலீபனே.
ஆயுத போராட்ட இயக்கத்துக்குள்ளே இருந்து கொண்டு காந்திய வழியைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருந்த திலிபனுக்கு அவர் உண்ணாவிரதம் இருந்த சூழலிலேயே நினைவுத்தூபி கட்ட வேண்டும் என எண்ணியே நல்லூரில் நினைவுத் தூபியை அமைத்தோம்.
திலீபனின் நினைவுத்தூபி தற்போது அழிந்தாலும் திலீபனின் தியாகமும் இனத்திற்கான அர்பணிப்பும் எப்போதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். தற்போது திலீபனை நினைவு கூறுவதை கூட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
திலீபன் ஆயுத போராட்டக் குழுவில் இருந்தாலும் அகிம்சைவழியில், காந்தீய வழியில் தியாகத்தை செய்தவரை நினைவுகூறுவதை தடுக்க வேண்டும் என ஏன் அரசாங்கம் நினைக்கின்றது என புரியவில்லை.இது தற்போது நீதிமன்றம் விடையமாக உள்ளது.
எங்களது விடுதலையை, உணர்வை கொச்சைப்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது. இது கண்டிக்கத்தக்க விடையமாகும். காலம் இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும். காலம் காலமாக திலீபனின் தியாகம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றார்.





