இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டை முடக்க நேரிடும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

மக்கள் சமூக பொறுப்பின்றி செயற்பட்டால், எதிர்வரும் நாட்களில் கடுமையான சனநடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன் அங்குள்ள மக்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர்கள் திறமைப பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினரும் வினைதிறனாக செயற்பட வேண்டும். மக்களிடம் இருந்து இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை எதிர்பார்க்கவில்லை. இந்தநிலைமை தொடர்ந்தால் மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.