2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தர முயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கான கல்வி மறுசீரமைப்பு, கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்வதேச பல்கலைக்கழகங்கள் சிலவற்றை இலங்கையில் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக இவற்றில் இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் சிறந்த உயர் கல்வியை வழங்கும் மையமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்றும், இதன்மூலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.






