தமிழ்த் தலைவர்களிடம் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன், 13ஆம் திருத்தத்தினை பிரச்சினைப் பொருளாக மாற்றி மக்களுக்கான அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதை தடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
13ஆம் திருத்தம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள மக்களின் அதிகாரமே ஓங்கிநிற்கும். ஒற்றையாட்சியின் கீழ் நியாயமான தீர்வை பெறமுடியாது.
எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையையும் கவனத்தில் எடுக்க வேண்டும். தற்போது தமிழர் நிலம் பறிபோகின்றது, சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழர்களின் இனப்பரம்பல் குறைகின்றது. அதைவிட முக்கிய பிரச்சினை படித்த இளையவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்கின்றனர்.
எனவேதான் அரசியல் யாப்பில் உள்ள அதிகாரத்தையேனும் உடன் அமுல்படுத்த கோருகின்றோம். இதனை உடன் நடமுறைப்படுத்தினால் இருப்பதை பாதுகாக்க முடியும்.
இந்தியப் பிரதமர் மோடியும் தனது பதவிக் காலத்திற்குள் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க ஆர்வமாக உள்ளார். 13ஆம் திருத்தத்தினை அமுல்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கும் உரிமை உண்டு. அதனை இந்தியாவும் மறுக்க முடியாது.
ஆனால் 13ஆம் திருத்தத்திற்கு தமிழ்த்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் 13ஆம் திருத்தத்தினை அமுல்படுத்தாது இந்தியா கைவிடக்கூடும். எனவே தமிழ்த் தலைவர்களிடம் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன், 13ஆம் திருத்தத்துனை பிரச்சினைப் பொருளாக மாற்றி மக்களுக்கான அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதை தடுக்க வேண்டாம், என்றார்.






