பெண் வேட்பாளரின் துண்டுப்பிரசுரத்தை கிழித்து அநாகரிகமாக நடந்த அர்ச்சுனா! தமிழ் மக்கள் கூட்டணி கண்டனம்


தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வியின் தேர்தல் துண்டுப்பிரசுரத்தினை வைத்தியர் அர்ச்சுனா கிழித்து அநாகரிகமாக நடந்து கொண்டதோடு அதனை முகநூலில் காணொளியாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சக வேட்பாளர் வரதராஜன் பார்த்திபன் இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முகநூலிலே பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். அப் பதிவில்,

“பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் 50% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண்களுக்கான உரிமைக் குரல்கள் அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகின்ற இக்காலத்தில்,

தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வி தனது தேர்தல் பரப்புரையின் போது வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வழங்கிய துண்டுப்பிரசுரத்தினை வைத்தியர் அர்ச்சுனா தனது திருவாயினையும், தன்னுடைய சாப்பாட்டு கோப்பையினையும் துடைக்கின்ற காணொளியினை அவரே தன்னுடைய முகப்பு பக்கத்தில் ஒளிபரப்புச் செய்து வழமை போல் தனது பண்புகளையும் வக்கிரத்தை காட்டியுள்ளார்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தன்னை ஒரு மேதாவியாகவும் தானே அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்திருக்கின்ற ஒரு பெரும் சக்தியாகவும் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற அர்ச்சுனா புரிந்த இந்த செயலானது நீதியானதா?

தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு பெண் வேட்பாளர் அவமதிக்கப்பட்ட இவ்விடயம் தொடர்பில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அதே நேரம் பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்ற பெண்கள்சார் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் எடுக்கப் போகின்ற நடவடிக்கைகள் என்ன” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மற்றுமொரு சக வேட்பாளரான அருள்பரன் உமாகரனும் இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவொன்றையும் இட்டுள்ளார். அப் பதிவில்,

“யாரையும் விமர்சனம்கூடச் செய்யாமல் நாகரிகமான அரசியலைச்செய்ய நினைக்கிறோம் ஒரு சக பெண்வேட்பாளரை இப்படிக்கேவலப்படுத்தும் அச்சுறுத்தும் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாட்டை நாம் கண்டிக்கின்றோம்” என உள்ளது.