யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது குழந்தைகளின் விளையாட்டு பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்கு கீழேயே குறித்த பொம்மை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட காலணி இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலணி “Bata” நிறுவனத்தின் பெயர் பொறித்த காலணியாகும். பெண்களின் காலணியை ஒத்ததாக காணப்படுகின்றது.
இன்று மேலும் சில மனித என்புத்தொகுதி எச்சங்களும் அடையாளம் காணப்படுள்ளன. இவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த வகையில் காணப்படுவதால் எண்ணிக்கையை கணிப்பிடுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இதுவரை 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றினை முழுமையாக அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





