கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முனையத்தின் சம்பிரதாய வெளியீட்டில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்கொட் நாதனுடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதிபரின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்க, மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின்போது, கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் (Colombo West International Terminal Private Limited) கொழும்பு துறைமுகத்தின் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக 553 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த முதலீட்டின் மூலமாக ஏற்படவிருக்கும் அபிவிருத்தியானது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள கட்டியெழுப்ப வழிவகுக்கும் எனவும், முக்கியமாக அதிகளவு அந்நியச்செலவாணியை ஈட்டித்தர வழிவகுக்கும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், குறிப்பிட்டார்.





