இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது யுத்தத்தை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை அழைத்துச் செல்ல அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முயற்சித்தபோது அதற்கு இலங்கை அரசு அனுமதிக்காமையின் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றனர்
இவ்வாறு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று(07) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
“அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதி யுத்தத்தின் போது பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள். யுத்தத்தை நிறுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் குடும்பத்தினரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு யுத்தத்தை நிறுத்த முயற்சித்தார்கள். ஆனால், சர்வதேசத்தின் எந்தவிதமான முயற்சிகளுக்கும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரைக் காப்பாற்றும் சர்வதேசத்தின் முயற்சிகளைத் தோற்கடித்துவிட்டு இலங்கை இறுதி யுத்தத்தை வெற்றிகொண்டது. இதனாலேயே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றன.
இதனாலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





