வடக்கு – கிழக்கை சுடுகாடாக மாற்ற முயலும் பேரினவாதம் – சாணக்கியன்

காசா போலவே வடக்கு – கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ள பேரினவாதம் விரும்புகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பலஸ்தீனுக்கு ஆதரவாக நேற்று(7) நடைபெற்ற நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது குறித்து தெரிவிக்கையில்,

சுடுகாடாக ஆக்கப்படும் நேரத்தில் மௌனம் காத்தவர்கள் பலர். எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஏன் எனில் அதன் வலியும் வேதனையும் எமக்குத் தெரியும்.

2009 இலும் அதற்கு முந்திய காலத்திலும் எம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். வைத்தியசாலைகள், மத வழிபாட்டிடங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முகாம்கள் என குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.

ஓர் இனம் அழிவதை பால்சோறு கொடுத்து கொண்டாடும் மனோ நிலையில் எம் தமிழர் இனம் என்றும் இருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.