ஹர்த்தால் காரணமாக இன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் வரவுகளை ஆய்வு செய்து பரீட்சை தொடர்பான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கெ.உதயகுமார் தெரிவித்தார்.
புதிய அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் சங்கமும் திங்கட்கிழமை மாணவர்களை வீட்டிலிருக்குமாறு கோரியிருந்தது. இதனால் இன்றைய தினம் பாடசாலைகளில் வரவு குறைவாக காணப்பட்டது.
எனினும் வடக்கு மாகாண கல்வித் திணைக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2020 உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் சில பாடசாலைகளில் நடாத்தப்பட்டுள்ளன. இதனால் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் பரிட்சை எழுதியுள்ளனர்
பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் உளப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனை வடக்கு கல்வி அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் பெற்றோரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது பரீட்சைகளை பிறிதொரு தினத்தில் நடாத்துவது தொடர்பில் ஆராயப்படும். மேலும் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் வரவுகளை ஆய்வு செய்து பரீட்சை தொடர்பான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.





