எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை உலகுக்குக் காண்பிப்பதற்காக உலக சுற்றுலா தினத்தை முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு 1980 இல் ஆரம்பித்தது.
உலக சுற்றுலா தினம் உலக நாடுகளில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
பண்டைய காலங்களிலிருந்து உலக நாடுகளின் ஈர்ப்பை இலங்கைத் தீவு பெற்றுள்ளது. இலங்கையின் இயற்கை சூழல், சாதகமான காலநிலை, ஆன்மீக நல்வாழ்வு, எளிமையான வாழ்க்கை, இயற்கை அழகு, வரலாற்றுச் சிறப்பு மற்றும் இயற்கையின் தனித்துவம் ஆகியவை உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முன்நிற்கின்றன.
இயற்கை அழகும் விருந்தோம்பலும் நிறைந்த நாடு என்ற வகையில், உலக சுற்றுலா நாடுகளில் நாமும் இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
இன்று உலகைப் பார்க்கும்போது, சுற்றுலாத் துறையானது உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது புலனாகிறது.
கோவிட் -19 தொற்று நோயானது இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் சுற்றுலாத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழ்நிலையை உணர்ந்து, எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.





