மஹிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸை அமைச்சவையில் சேர்க்க மாட்டோம் – தேசிய மக்கள் சக்தி

எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்தொழில் அமைச்சர். ஆகவே அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான் தான்  அமைச்சராக வரப்போகின்றேன் அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அமைச்சர்களுக்கு எங்களிடம் எந்த விதமான தட்டுப்பாடுகளும் இல்லை.கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூஜா தூக்கிய உங்களைப் போன்றவர்களை எங்களுடைய அமைச்சுகளில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சில அரசியல் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் பெயரை பயன்படுத்தி அரசியல் பிரச்சாரங்களை செய்து கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளோம்.

வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அநுரகுமார திசநாயக்கவோடு எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவானவர்கள் என்று கூறுகின்ற போக்கு காணப்படுகின்றது. [NewsCut.lk] எனவே உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையகத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினுடைய வேட்பாளராக போட்டியிட்டிருந்த அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றிருந்தார். அதன் மூலம் மக்களுடைய அமோக ஆதரவு அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுடைய ஆதரவு பலமடங்கு பெருகியுள்ளது.

இங்கிருக்க கூடிய சில தமிழ் கட்சிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துவிட்டு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அந்த புகைப்படங்களை வைத்து இங்கு அரசியல் வியாபாரம் செய்கின்ற போக்கு காணப்படுகிறது.

அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியை சந்தித்திருந்தார். அந்த புகைப்படங்களை வைத்து தங்களுக்கு[NewsCut.lk] சாதகமான அரசியல் நாடகங்களை செய்து வருகிறார். அவர் மாத்திரமில்ல சுமந்திரன் சிறீதரன் போன்றோரும் இதனையே செய்கின்றனர்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூஜா தூக்கியவர்கள், மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஊழல் மோசடிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக இருந்தவர்கள், மஹிந்த ராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு தெரிவித்தவர்களை ஒருபோதும் எங்களுடன் இணைக்கப்போவதில்லை.

எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்தொழில் அமைச்சர், ஆகவே அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான் தான்  அமைச்சராக வரப்போகின்றேன் அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியில் வெறுமனே 25 அமைச்சு பதவிகள் மாத்திரமே காணப்படும். 25 அமைச்சு பதவிகளையும் பொறுப்பேற்பதற்கு 50க்கும் அதிகமான திறமை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியில் உள்ளார்கள்.

எனவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ்வானந்தாவிடம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், அமைச்சர்களுக்கு எங்களிடம் எந்த விதமான தட்டுப்பாடுகளும் இல்லை. உங்களைப் போன்றவர்களை எங்களுடைய அமைச்சுகளில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.

இன்னொருவரும் தான் தான் வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் என சொல்லிக்கொண்டு திரிகின்றார். இது ஒரு வெட்கக்கேடான செயல். கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியிலே பங்காளர்களாக இருந்து அந்த அரசாங்கத்தை முற்று முழுதாக பாதுகாத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. அன்றைக்கு ஒன்றையுமே செய்ய முடியாதவர்கள் இன்று வந்து தேசிய மக்கள் சக்தியினுடைய அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்யப் போவதாக கூறுகின்றார்கள். இது நகைப்பிற்குரிய விடயமாகும் என்றார்.