காணாமல் போனதாக சொல்லப்படுபவர்கள் வெளிநாட்டில் – கெகலிய ரம்புக்வெல

காணாமல் போனதாகச் சொல்லப்படும் சிலர் வீசா பெற்று வெளிநாடுகளிற்கு சென்றுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஊடகத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

இந்த நாட்டிலே 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுள்ளது. யுத்தம் ஒன்று ஏற்படுமானால் பல அசம்பாவிதங்களும் ஏற்படும். காணாமல் போனோர் பற்றி எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன.

காணாமல் போனதாக சொல்லப்படும் சிலர் வீசா பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலர் தமது அடையாளங்களை, முகவரியை மாற்றிவிட்டு இருப்பதிகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் பல முரண்பாடுகள் இருக்கின்றன.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனில் அவர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளையும் ஆராய வேண்டும். 2010ற்கு முன்னரே ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். 2010ற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எவருமே காணாமலாக்கப்படவில்லை.

இணையவழியிலான குற்றங்களை தடுப்பதற்காக புதிய சட்டங்களை இயற்றுவது தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம். இணையக் குற்றங்கள் தொடர்பில் விரைவில் புதிய சட்டங்களை உருவாக்குவோம், என்றார்.