20ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அசுரப் பலத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கும் ஒரு வரம் ஆகும். ஜனாதிபதி அதை ஒருபோதும் தமிழ் மக்களின் சாபமாக்கி விடக்கூடாது. அவ்வாறு நேரின் கடைசியில் அது முழு நாட்டுக்குமே பெரும் சாபமாகி விடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளே இஸ்லாமியப் பயங்கரவாதத்தைக் கடந்த அரசாங்கத்தால் ஒடுக்க முடியாமல் போனது என்றும், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாகத் தான் இருந்தமையாலேயே விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒடுக்க முடியாமற் போனதற்கும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தமைக்கும் அரசியலமைப்புக் காரணம் அல்ல.
இஸ்லாமியத் தீவிரவாதம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமைக்குப் பாதுகாப்புத்தரப்பில் இருந்த குறைபாடுகளும், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் மாறிய சர்வதேச அரசியல் நிலவரங்களுமே காரணங்களாகும்.
இக்காரணங்களைத் தவிர்த்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை வேண்டி நிற்பது அரசாங்கத்தால் பயங்கரவாத கண்கொண்டு நோக்கப்படும் சிறுபான்மையின மக்கள் மனதில் சந்தேகங்களையே விதைத்திருக்கிறது.
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் மிக்கவராக மாறியவுடனேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மேற்கொண்ட இலங்கை விஜயமும், இதன்போது அவர் சீனாவை இலங்கையைச் சூறையாடும் ஒரு வேட்டைக்காரனாக உருவகித்து ஆற்றிய உரையும், தொடர்ந்து அவசரம் அவசரமாகத் தமிழ்த் தேசியத் திட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்தியகத் தூதுவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பும் இலங்கை இந்நாடுகளுக்கிடையேயான இந்தோ பசுபிக் போட்டியின் மோதுகளமாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.





