இந்தியாவுக்குத் தப்பித்த குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்றவர் கைது

வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு இந்தியாவுக்குத் தப்பித்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரை குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழகம் வேதாரண்யம் கோடிக்கரையில் யாழ்பாணத்தில் இருந்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் பைப்பர் படகு ஒன்றில் பயணித்த திரிகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை நேற்று தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

முகமது அன்சாரி (வயது 45) அவரது மனைவி சல்மா வேகம் (வயசு 35) இவர்களது 10 வயது மகன் ஆகியோரே தமிழக கோடியக்கரை சவுக்கு காட்டில் கரையேறிய போது கைது செய்யப்பட்டனர்.

அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் வைப்புக்களை மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.