கொரோனா அச்சம் கைதிகள் விடுவிப்பு – அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்களா?

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா நோய்த் தொற்றுப் பரவு அதிகரிப்பதால் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய விளக்கமறியல் மற்றும் விசாரணைகளை நிறைவு செய்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.

வெலிக்கடை மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலைகளில் 107 கைதிகளுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியபட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று சிறைச்சாலைகளிலும் தீவிரமாக பரவிவரும் நிலையில் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் இனியேனும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவை சேனாதிராஜா நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். அதனை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.