தனது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 54 ஆண்டுகள் கடூழியச் சிறை விதிப்பு

தனது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 54 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

2016ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில் குறித்த சிறுமியின் தந்தையார் தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இதனால் 13 வயதுச் சிறுமி, சிறிய தாயாரின் பராமரிப்பில் இருந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வகுப்பாசிரியரிடம் தனது தந்தையால் மேற்கொள்ளப்படும் நடத்தைகள் தொடர்பில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் முறைப்பாட்டை ஏற்ற சிறுவர் நன்னடத்தை அதிகாரி, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் குறித்த எதிரிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை ஒன்று 2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து எதிரி தலைமறைவாகி இருந்தார். அதனால் வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சடடத்தரணி குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 241ஆம் பிரிவின் கீழ் வழக்கை எதிரியின்றி விசாரிக்க விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்றும் அனுமதியளித்தது.

இந்த நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களைகக் கொண்ட குழு ஒன்று எதிரியைத் தேடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. எதிரியின் இரண்டாவது மனைவியார் கடந்த மே மாதம் 25ஆம் திகதி புங்குடுதீவுக்குச் செல்ல இருப்பதனை அறிந்த பொலிஸாரும் சிவில் உடையில் அவருடன் பேருந்தில் பயணித்துள்ளனர்.

அவர் புங்குடுதீவு ஆலடியில் எதிரியைச் சந்தித்த போது, பொலிஸார் எதிரியைக் கைது செய்தனர். குறித்த எதிரி வவுனியா மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில், குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நாளாந்தம் எடுக்கப்பட்டது. சிறுமி தனக்கு நடந்தவற்றை மன்றில் சாட்சியமளித்தார். எனினும் தனது மகள் கூறுபவை அனைத்தும் பொய் என்று எதிரி கூண்டுச் சாட்சியமளித்தார்.

வழக்கு இன்றைய தினம்(11) தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தது.அதனடிப்படையில் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் அதிகபட்ச தண்டனையாக 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அதனால் மூன்று குற்றங்களுக்கும் 54 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குற்றத்துக்கும் 3 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் தலா 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

ஒவ்வொரு குற்றத்துக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறினால் 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், தண்டனைத் தீர்ப்பளித்தார்.