தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள் – விக்கினேஸ்வரன்

இம்முறை தீபாவளிப் பண்டிகையை உங்கள் வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள். மக்கள் பெருவாரியாகக் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்தவர்கள் நீரழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கு கொரோனா நோயானது பாரிய ஆபத்தினை விளைவித்து வருகின்றதை அவதாணிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே வரவுள்ள தீபாவளி பண்டிகை தினத்தன்று சுற்றத்தார், உறவுகள் நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு செல்லுதல் புதிய உடுபுடவைகள் வாங்குதல் ஆபரணங்கள் வாங்குதல் மற்றும் வழிபாட்டு தலங்களுக்குக் கூட்டமாகச் செல்லுதல் ஆகிய வழக்கங்களைத் தவிர்த்தல் நலம் என நாம்
கருதுகின்றோம்.

ஏனெனில் அவ்வாறு கருமங்களுக்குச் செல்லும் போது கொரொனா தொற்றிற்கு ஆளாகக்கூடிய சந்தர்ப்பம் அதிகமா உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று எம்மிடையே பரவத் தொடங்கிவிட்டால் நாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும்.

இம்முறை தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களினதும் தங்களது இரத்த உறவுகள் மற்றும் நண்பர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டும்.

வெறும் அரசியல்வாதி ஒருவருக்கு ஏன் இந்தக் கரிசனை என் சிலருக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் சமூக நலனில் ஈடுபாடுள்ளவனே அரசியல்வாதி. வரமுன் காக்கும் நோக்குடன் இந்த அரசியல்வாதி செயற்படுகின்றார், என்றார்.