யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
பேலியகொடை மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு சென்ற நிலையில் சந்தை மூடப்பட்டதால் குறித்த இளைஞன் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மாதிரி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். எனினும் அவர் நல்லூர் மருத்துவ சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.





