வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு, மயானங்களை துப்பரவு செய்கின்றனர் – டகள்ஸ்

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்பரவு செய்ய எவரும் தயாரில்லை. இப்படியானவர்களை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்கொள்ளாது என கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

காலத்திற்கேற்ப தேவைகைளை இனங்கண்டு அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்கின்ற வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் கிளப்புகின்ற சுயலாப அரசியலை சில தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர்.

மயானங்களை துப்புரவு செய்கின்ற அரசியல்வாதிகள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவ் அரசியல்வாதிகளின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர், எனத் தெரிவித்தார்.