சுழிபுரம் – குடாக்கனையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியை நிறுத்துவதுடன் வலி.மேற்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(22) இடம்பெற்றது.
வலி.மேற்கு பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுழிபுரம் – குடாக்கனையில் அண்மையில் இரு நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மேற்படி இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்தப் படுகொலை மற்றும் கசிப்பு உற்பத்தி – விற்பனையால் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை வலி.மேற்கு பிரதேச சபை அமர்வின்போது காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன
சட்டம், ஒழுங்கு போன்றவற்றை நிலைநாட்டுவோர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இது தொடர்பாகவும் இரட்டைப் படுகொலைக்கான நீதி விசாரணை மற்றும் கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக இப் போராட்டம் இடம்பெற்றது.





