சுட்டுக்கொலை செய்வேன் என பொலிஸார் மிரட்டியதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து இடைமறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில் இன்று(10) வியாழக்கிழமை இரவு உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் பாண் வாங்குவதற்காக கடைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரை வழிமறித்துள்ளார். “நாம் மோட்டார் சைக்கிளிலை மறித்த போது நிறுத்தாமல் ஏன் ஓடினாய்” என தகாத வார்த்தைகளால் பேசி அவரது மோட்டார் சைக்கிளையும் காலால் உதைத்துள்ளார்.

அதன் போது குறித்த நபர் “தான் சந்திக்கு வரவில்லை எனவும் தான் பக்கத்து கடையில் பாண் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும்” பதிலளித்துள்ளார். அதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியை அவருக்கு காட்டி “நான் நினைத்தால் இதிலையே சுட்டுவிடுவேன் ” என மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

பின்னர் துப்பாக்கி முனையில் அவரை சந்திக்கு அழைத்து சென்ற போது , சந்தியில் நின்ற மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் இவரை மறிக்கவில்லை , தப்பி சென்றவர் இவர் இல்லை என கூறியுள்ளார். அதன் போது துப்பாக்கி முனையில் அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் சென்றவரை ஓடு என மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசி துரத்தி உள்ளார்.

இச் குறித்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரினால் , மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.