கூட்டமைப்பினுள் கெத்துக் காட்ட இருக்கும் ரெலோ

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலைக் கழகம்(ரெலோ), தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தனக்கான அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான படிக்கற்களில் கால் பதித்துள்ளது. கூட்டமைப்பு இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு வங்கியில் சரிவைச் சந்தித்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையும் 16 இருந்து 10ஆக குறைவடைந்திருந்தது.

ஆயினும் ரெலோ கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இம் முறை கூடுதலாக ஒரு ஆசனத்தை பெற்று மொத்தமாக மூன்று பெற்றிருக்கிறது. கூட்டமைப்பின் வாக்குகள் சரிவடைந்த நிலையிலும் தன்னை நிலைநிறுத்திய இறுமாப்பில் கூட்டமைப்பின் விடையங்களில் ரெலோ தலைபோடத் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தொடர்பிலும், கொறடா தொடர்பிலும் மாற்றம் வேண்டுமென கோரியிருந்தது. ரெலோவைத் தொடர்ந்து புளொட்டும் கூட்டமைப்பின் பேச்சாளர்,கொறடா மாற்றம் தொடர்பில் தமது கோரிக்கையையயும் பதிரஸ்தாபித்திருந்தது. இவ் விடையம் தொடர்பில் புளொட்டையும் ரெலோவே தூண்டிவிட்டது என்றால் மிகையாகாது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு யாழ்பாணம் வருகைதந்த ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதியப்பட வேண்டியதன் அவசியம் பற்றி இடித்துரைத்தனர். மேலும் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களை இணைப்பது தொடர்பிலும், கூட்டமைப்பிற்குள் இருந்த உட்கட்சி மோதல் தொடர்பிலும் ஜாடைமாடையாக மேடையில் பேசினர்.

மேலும் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு விடுதலை இயக்கத்தையும், விடுதலைப் புலிகளையும், ஓட்டுமொத்த விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொள்ளாதாலேயே கூட்டமைப்பு தோல்வியைத் தழுவியது என ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாகவே மேடையில் பேசியிருந்தார்.

மேலும் “கூட்டமைப்பிற்குள் முதலில் வந்த கட்சி தாங்கள் தான், ரெலோ எங்கு உள்ளதோ அங்கு தான் கூட்டமைப்பு இருக்கும்” எனக் கூறி கூட்டமைப்பிற்கு உரிமையாளர்கள் தாங்களே என சொல்லாமல் சொல்ல முனைகின்றனர். தமிழரசுக் கட்சிக்கு ஈடு இனையான கட்சியாக தங்களை நிலை நிறுத்திக்காட்ட ரெலோ தனது காய் நகர்தல்களை முன்னெடுக்கிறது.

ரெலோ கடந்த இரு வருடங்களில் பாரிய பிளவுகளைச் சந்தித்திருக்கிறது. வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர்களாக இருந்த டெனிஸ்வரன், குணசீலன் ஆகியோர் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் வெளியேறினர். அதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் வெளியேறினார். இவ்வாறான பிளவுகளை ரெலோ சந்தித்தாலும் தன்னை நிலைநிறுத்தி குறிப்பிடத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறது.

மேலும் கூட்டமைப்பிற்குள் இருந்து தவறானவர்களை வெளியேற்றிவிட்டு கூட்டமைப்பை சுத்தப்படுத்தி கூட்டமைப்பை புணரமைப்பு செய்து தமிழ் தேசிய அரசியலலில் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ரெலோவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம்.