மக்கள் சமூக அக்கறையோடு செயற்பட்டாலே வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்பட்டால் மாத்திரமே வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று இன்று(06) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் புரவி புயல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அதனுடைய தாக்கத்தை மதிப்பீடு மேற்கொள்வதற்கும் அதேபோல் இயல்பு நிலையை மீள கட்டியெழுப்புதல், நிவாரண நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இன்றைய ஒரு அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது ..
இதற்கு அத்தியாவசிய பங்காளர்களை மாத்திரம் அழைத்து கலந்துரையாடினோம். இதன் போது சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

அதிக வெள்ளம் காரணமாக வீடுகளில் தங்க முடியாதவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, இடைத்தங்கல் முகாம்களை மூடி அல்லது இடம் மாற்றி பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல். அதேபோல பாடசாலைகளை சுத்தப்படுத்தி இயல்பு நிலையை மீள ஆரம்பித்தல் அதேநேரம் சுகாதார நடவடிக்கைகளை அங்கு உறுதிப்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகளை பிரதேச செயலர்கள் மற்றும் உள்ளுராட்சிசபையினரின் உதவிகளை பெற்று அதனை செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது .
கல்வித் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களத்தினரின் உதவியுடன் இதனை செயற்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது இதற்கு உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும் அதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக மக்களின் சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டிருப்பது இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் கழிவுப்பொருட்களை வீசுதல் வடிகால்களை மூடுதல் அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளும் காரணத்தினாலும், வடிகால்களை சட்டவிரோதமாக தடுப்பதும் வெள்ள நீர் தேங்கும் அவல நிலை ஏற்படுகின்றது

இதனை விட புயல் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் விவசாயம் மீன்பிடித்துறை துறையில் ஏற்பட்டிருக்கின்ற சேதவிபரங்கள் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்பற்றிய விவரங்கள் கடல் அரிப்பு, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கல்வித் துறை சுகாதாரத்துறை மின்சார சபை போன்ற பல்வேறுபட்ட தரப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து ஒரு துரித மதிப்பீடு அறிக்கை ஒன்று தயாரிக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்திருக்கின்றோம்.

அதன் அடிப்படையிலே எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும் ஏனையவற்றை அதனை உரியவாறுசெயற்படுத்துவதற்கு உரிய தகவலைப் பெற்று அதனை செயற்படுத்துவதற்குள்ளோம் எனத் தெரிவித்தார்.