தென்மராட்சி, தனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவியிடம் அநாகரிகமாக நடந்ததுடன் , மாணவியின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அயலவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தென்மராட்சி, தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் அயல் வீட்டில் வசிக்கும் நபர், வெள்ள நீர் தனது வீட்டு வளவுக்குள் உட்புகாத வகையில் அயல் வீட்டு வாசலில் உள்ள மண்ணை வெட்டி , தனது வீட்டு வேலியைச் சுற்றி போட்டுள்ளார்.
அதனை அவதானித்த வீட்டுப்பெண், “எதற்காக எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் மண்ணை எடுக்குகிறீர்கள், இப்படி என்றால் , எங்கள் வீட்டு வாசலில் வெள்ளம் தேங்கும்” , என கூறியுள்ளார்.அதற்கு மண்ணை வெட்டிக்கொண்டு இருந்த நபர் , கையில் இருந்த மண் வெட்டியால் அப்பெண்ணை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த பெண் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். அதனை அவதானித்த வீட்டிலிருந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகளான பாடசாலையில் கற்கும் மாணவி , ஓடி வந்த போது , குறித்த நபர் அநாகரிகமாக நடந்துள்ளார்.
அந்நபரின் அநாகரிகமான செயலால் அருவெறுப்படைந்த மாணவி பயத்தில் வீட்டினுள் ஓடி சென்று கதவினை பூட்டி விட்டு அபயக்குரல் எழுப்பியதுடன், கிராம அலுவலகர் மற்றும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
அதேவேளை மாணவியின் கூக்குரலை அடுத்து அயலவர்களும் கூடினர். இதனையடுத்து மயக்கமுற்ற பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பெண்ணை தாக்கிய நபரை கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தான் தாக்கியதற்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளதாகவும், அதற்கு அப் பெண் சம்மதிக்க வில்லை எனவும் அயலவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை கணவர் இல்லாது தனது மகளுடன் தனித்து வாழும் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடாத்தி , மாணவியுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆதரவற்று நிற்கும் அந்த குடும்பம் , அந்நபரினால் தமக்கு மீண்டும் ஏதேனும் ஆபத்து நடந்து விடுமோ எனும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதுடன் , தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என அயலவர்கள் கோரியுள்ளனர்.





