
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் 300 பேரை நாட்டிற்கு அழைப்பதற்குரிய அனுமதியை சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கொரோனா தொற்று ஒழிப்பிற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயுடன் நேற்று(18) கலந்துரையாடியதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலை கழிக்கும் 14 நாட்களும் ஹோட்டல்களுக்குள் தனிமையாக இருப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பி.சி.ஆர் சோதனைகளை தெரிவுசெய்யப்பட்ட சில தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்தினூடாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரச சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





