மருதனார்மடம் கொத்தணி; மேலும் 3 பேருக்கு தொற்று

மருதனார்மடம் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று (19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 433 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடையவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இளவாலை, மல்லாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குகின்றனர்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.