சுனாமி நினைவேந்தலுக்கு தடை! இராணுவத்தளபதி தெரிவிப்பு

எதிர்வரும் 26ஆம் திகதி சுனாமி நினைவேந்தலை நினைவாலயங்களில் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதியும் கொரோனா செயலணியின் தலைவருமான சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிலைமை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். பண்டிகை காலங்களில் அதிக கவனம் தேவை.

ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அனைத்து பொது நிகழ்வுகள், நினைவேந்தல்கள், களியாட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

எனவே இந்த காலப்பகுதியில் எந்தவொரு பொது நினைவேந்தல்கள் உள்ளிட்ட எதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படுவது வழமை. அந்த நேரத்தில் வீட்டில் இருந்து சுனாமியால் உயிரிழந்தவர்களை நினைவு கூற முடியும், என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.