வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் தேசியக் கட்சிகள் சார்ந்த முடிவைத் தந்திருக்கையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் தங்களுக்குள் முரண்படுவது அவர்களின் இருப்பை மட்டுமல்ல தமிழ் தேசியத்தின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தி விடும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான விரக்தி வாக்குகளை மாற்றுக் கட்சிகள் என தம்மை அடையாளப்படுத்தி இரு கட்சிகள் பெற்றுக்கொண்டன. அது அவர்களுக்கான நிரந்தர வாக்கு வங்கி இல்லை என்பதனை அவர்கள் உணர வேண்டும்.
தலைவர் காட்டிய வீடு தவறாக உள்ளது என்று வெளியில் வந்த மக்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் தொட்ட சைக்கிளையும் மீனையும் உதறித் தள்ள எத்தனை செக்கன்கள் எடுக்கும்.
இது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினருக்கும் தான். தங்களுக்குள் முரண்படுவதை நிறுத்தி குறைந்த பட்சம் தாங்கள் தாங்களின் கட்சியாய் ஒன்றாய் முன்னோக்கி நகர எத்தனிக்க வேண்டும்.
ஒரே மொழி பேசும் சகோதர இனத்தவர்கள் தமது பிரதிநிதித்துவம் அரிதாக உள்ள இடங்களில் பிளவுபட்டு பிரநிதித்துவத்தை இழக்காது மக்களுக்காக ஒன்றினைகின்றனர். ஆனால் எங்களுடைய தமிழ் கட்சிகள் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்று தெரிந்தும் கூட கட்சிகளின் பல பரீட்சைகளை திகாமடுல்ல, திருகோணமலை போன்ற தொகுதிகளில் நடாத்துகின்றனர்.
இதன் விளைவே அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றோம். திருகோணமலையில் இம்முறை தப்பித்துவிட்டோம். ஆனால் எதிர்வரும் காலங்களில் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியே.
கொள்கைகள் உடன்பட்டாலே கட்சிகளின் ஒன்றினைவு சாத்தியம் என்று கூறுபவர்கள் கொள்கைகள் கட்சிக்கானதா மக்களுக்கானதா என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். கொள்கைகளுடன் உடன்பட்ட நீண்டகால கூட்டுக்கள் அமையாது விட்டாலும் தேர்தல் காலங்களில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்து பிரதிநித்துவத்தை பாதுகாக்க தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் முன்வர வேண்டும்.
பிரபாகரன் டிலக்சன்





