தமிழ் மக்களின் தீர்வு விவகாரத்தில் பிரித்தானியா ஆர்வமாக உள்ளது – விக்னேஸ்வரன் எம்.பி

தமிழ் மக்களின் தீர்வு விவகாரத்தில் பிரித்தானியா ஆர்வமாக உள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் என்ன என்ன என்பது தொடர்பில் எங்களிடத்தே கேட்டிருந்த போது அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பிலும் நாங்கள் எடுத்துக் கூறியிருந்தோம்.

ஆனாலும் எங்களுடைய பலவிதமான பிரச்சனைகளைப் பற்றியும் அவர்களுக்கு தெரிந்திருந்த்து. அதேநேரத்தில் எத்தளவிற்கு இவற்றிற்கு அப்பால் சென்று இரண்டு இனங்களையும் என்ன விதமாகச் சேர்த்து வைக்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராயந்தார்கள்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டிருந்தனர். இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திலே பொருளாதார ரீதியாக எங்களுடைய தேவை என்ன என்பது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி செய்து அறிக்கை பெறவில்லை என்பதை சுட்டி காட்டினோம்.

இது சம்பந்தமாக கடந்த 2003 இலே அவர்கள் ஒன்று தொடங்கினார்கள். அதன் பின்பு என்னுடைய காலத்திலே நான் கேட்டு தொடங்கினார்கள். ஆனால் அதை அவர்கள் முடிக்கவில்லை.

ஆகவே எங்களுடைய வடகிழக்கு மாகாணத்தில் மக்களிக்கு இருக்கும் தேவைகள் என்ன? அதாவது போரின் பின்னர் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் ஏற்பட்டுள்ள தேவைகள் என்ன என்பது சம்பந்தமாக போதுமான அறிக்கைகள் தயாரிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

மேலும் எங்களது அரசியல் ரீதியான பிரச்சனைகள தொடர்பில் கேட்ட போதும் போதுமான அளவு நாங்கள் எல்லோருமே அதனை எடுத்துக் கூறியிருந்தோம்.

குறிப்பாக அரசாங்கத்தினுடைய முகம் தற்போது சற்று வித்தியாசமாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம்.
ஆனாலும் வருங்காலத்தில் இவை மாற்றமடையக் கூடும் என்ற ஒரு கருத்தை எங்களிடத்தே அவர்கள் முன்வைத்தார்கள்.

ஆகவே அதிலிருந்து அவர்களும் தங்களால் இயலுமானவரையில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் மற்றும் அரசாங்கம் எவ்வாறு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியும் என்பது சம்பந்தமாக அவர்களுடைய பேச்சிலிருந்து எங்களால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது என்றார்.