தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் இந்திய வௌிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று(07) காலை இச் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் இன்று இந்திய வௌிவிவகார அமைச்சரை கொழும்பில் சந்தித்தனர். இதன்போது, பெருந்தோட்டத்துறைகளின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய வௌிவிவகார அமைச்சரை இன்று சந்தித்துள்ளனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபை முறைமை தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் பேசப்பட்டது.