தமிழ் தேசிய அரசியலுக்குள் தலையிடுவதை புலம்பெயர் வர்த்தகர்கள் நிறுத்த வேண்டும்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் புலம்பெயர் வர்த்தகர்களிடம் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவில் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக பேரம் பேசினாரா? என எழுப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கும் போதே அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர்.

அவ்வாறு மறுத்தவர்கள் அவ்வாறு கேட்டபட்டமை தொடர்பில் எனக்கு தகவல் தெரிவித்தனர்.சுமத்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.

அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.

அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.

எனவே  புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள்.

தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.